துறையூர் நகர ரெட்டி நல சங்க தலைவரும், திருமண தகவல் மையம் நிர்வாகியுமான திரு.நடராஜன் (N T தம்பு) அவர்கள் இன்று மதியம் 12.30 மணி அளவில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவரது சொந்த ஊர் துறையூர் அருகில் உள்ள சொரத்தூர் கிராமம்.
இவர் துறையூரில் ரெட்டி நல சங்கம் உருவாக்கிட முழு நேரமாக பணி புரிந்தவர். துறையூரில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டா ரெட்டி நல சங்கம் மட்டுமே இருந்து வந்தது. கொண்ட ரெட்டி அல்லாத ரெட்டி நல சங்கம் தொடங்க வேண்டும் என முடிவெடுத்த போது அப்போதைய நிர்வாகிகள் திரு.K.R. ரவி மற்றும் திரு. ராஜாராம் இருவரும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை ” N.T.தம்பு “என அன்போடு அழைக்கப்படும் திரு. நடராஜனிடம் ஒப்படைத்தனர். அவர் மூளை முடுக்கு அனைத்திற்கும் சென்று நகரில் வாழும் ரெட்டியார்களை அடையாளம் கண்டு சங்கத்தில் இணைக்க எந்த பிரதி பலனும் பாராமல் தொண்டனாகவே இறுதி வரை நின்று வலுவான அமைப்பை உருவாக்க சிறப்பாக பணியாற்றியவர் என் கடன் பணி செய்து கிடப்பதே என பணி யாற்றிய இவர், கடந்த 2018 டிசம்பரில் நடைபெற்ற துறையூர் எழுச்சி மாநாட்டிற்கு முன்னிலை வகித்தார். இந்த வெற்றி மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்தியதில் அங்கிருந்த முக்கிய நிர்வாகிகளுடன் இணைந் து பணி புரிந்ததில் இவருக்கும் முக்கிய பங்குண்டு. எனவே தான் இவரது பணியை கௌரவிக்கும் பொருட்டு கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரை துறையூர் நகர ரெட்டி நல சங்கத்திற்கு தலைவராக சங்கம் இவரை தேர்ந்தெடுத்தது. இவர் எளிமை, நேர்மை, அடக்கம்,அமைதி இவற்றிற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். சாதாரண தொண்டனாக இருந்து தலைவராக உயர்தாலும் அனைவரிடத்திலும் பண்போடு பழகிய இவர், அன்பு, பரிவு, கருணை இவற்றுடன் வயது வித்தியாசம் பாராமல் வாழ்ந்து காட்டியவர். தன்னைவிட வயது குறைந்தவர் இடத்திலும் அவர் மரியாதை தவறியதில்லை. இந்த கொரானா காலகட்டத்தில் பிறருக்கு உதவும் நோக்கில் சென்னையில் இருந்து செயல்படும் ஓ.பி்ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளைக்கு தன் மகன் திரு. N.பிரபாகர் மூலம் ௹5000/- நன்கொடை வழங்கியவர். நம் சமூக மக்களுக்கென கடந்த 15 ஆண்டுகளாக திருமண தகவல் மையத்தினை சங்கத்திற்கென தொடங்கி இன்று வரை சிறப்பாக நடத்தி, துறையூர் ரெட்டி நகர சங்கத்திற்கும், நம் சமூகத்திற்கும் பெருமை சேர்த்தவர்.இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் பாலமாக செயல்பட்ட இவர் “வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும்” மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராக வாழ்ந்தார். இவர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரிக்கு தன் உடலை இறப்புக்கு பிறகு தானம் தருவதாக எழுதிவைத்தவர். இதனால் இவரது உடல் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனைகளுக்கு பயன்பெறும் வகையில் தொலை நோக்கு கொண்டவராக வாழ்ந்தவர். ஈடு இணையில்லாத சமுதாய உணர்வு கொண்ட இவர் இன்று மதியம் 12.30. மணிக்கு தனது 83வது வயதில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற அதிர்ச்சியான செய்தி யாராலும் நம்ப முடியவில்லை. அப்படி ஒரு ஆரோக்கிய மான உடல் அமைப்பு கொண்டவர். அன்பான மனைவியுடன் வாழ்ந்த இவருக்கு இரு மகள்கள், ஒருமகன் உள்ளனர். இவரது மகன் திரு.பிரபாகர் இவரைப் போலவே சங்க பணிகளில் தந்தைக்கு உற்ற தனையனாக பணி புரிபவர். இவர் மறைவு அந்த பகுதியில் வாழும் நம்சமூகத்திற்கும், ரெட்டி நல சங்கத்திற்கும் பேரிழப்பாகும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், துறையூர் நகர ரெட்டி நல சங்க நிர்வாகத்திற்கும் ரெட்டிமலர் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்.

Loading

ரெட்டி மலர்-மாத இதழ்