“பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்இளைப்பில்லை கணென்று கும்மியடி”
என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.புதுமைப் பெண்களை உருவாக்கும் புரட்சிப் பணியில் ஈடுபட்ட மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி. இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற காந்தியவாதி. அதே நேரத்தில் சமூக சீர்திருத்த வாதியாகவும், அஞ்சாநெஞ்சம்கொண்டவராகவும் திகழ்ந்தவர். முத்துலட்சுமி புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1866 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று பிறந்தார்.133 வது பிறந்த நாளான இன்று கூகுள் நிறுவனம், முகப்பு பக்கத்தில் இவரின் படத்தை வெளியிட்டு கௌரவித்தது.
முத்துலட்சுமியுனுடைய தந்தை நாராயணசுவாமி ஒரு பிராமணர். தாய் சித்தரத்தம்மா இசை வேளாளர். இவரது பெற்றோர்கள் கடும் சமூக எதிர்ப்புகளுக்கு இடையில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவரது தந்தை புதுக்கோட்டையில் இருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்தார். முத்துலட்சுமி சிறு பிராயத்தில் ஆஸ்துமா நோயால் பெரும் அவதிப்பட்டார். நான்கு வயதில் திண்ணைபள்ளியில் படிக்கும் பொழுதே மிகுந்த புத்தி கூர்மை கொண்டவரான முத்துலட்சுமி ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவியாக கல்வியில் சிறந்தவராய் இருந்தார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கபடுவது இல்லை. ஆனால் முத்துலட்சுமி ஆசிரியர்கள் உதவியுடன் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டார். முத்துலட்சுமி முதலாம் பாரம் முடித்த பின்னர்தான் அவர் ஆங்கிலம் கற்ற விஷயம் அவருடைய அப்பாவுக்கு தெரியவந்துள்ளது. கல்லூரி படிப்புக்காக மகாராஜா கல்லூரியில் சேர விரும்பிய அவருக்கு அங்கே படிக்க முதன் முதலில் இடம் தரவில்லை. அவர் பெண் என்பதும் அவருடைய தாய் பிராமணர் அல்லாதவர் என்பதும் அதற்கான காரணங்கள். ஆனால் மகாராஜாவின் உதவியுடன் முத்துலட்சுமியை கல்லூரியில் சேர்த்துக் கொண்டார்கள். கல்வி உதவித் தொகையும் அவருக்கு கிடைத்தது. சிறுவயது முதலே அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். ஆண்கள் மட்டுமே படித்து வந்த சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907 ஆம் ஆண்டில் சேர்ந்து படித்த போது அவர் மட்டுமே ஒரே பெண் மருத்துவ மாணவர். 1912 ல் அவர் ஆசியாவிலேயே குறிப்பாக இந்தியாவின் முதல் பெண் மருத்துவ டாக்டர் பட்டம் பெற்றவர். படிப்பை முடித்த பிறகு, எழும்பூர் அரசு மருத்துவ மனையிலும், டாக்டர் ஜிப்மர் நடத்திய மருத்துவ மனையிலும் என சில காலம் சென்னையில் பணியாற்றி வந்தார்.
தொடர்ந்து புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவ மனையில் சில ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றி மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்தார். ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த திவான் பகதூர் சுப்புராயலு ரெட்டியாரின் சகோதரியின் மகனான மருத்துவர் டி.சுந்தரரெட்டி யை 1914 ல்அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்ம ஞான சபை வழக்கப்படி திருமணம் செய்து கொண்டார். அதுமுதல் ஆங்கிலேயர் இவரை “மிஸ்ஸஸ் ரெட்டி ” என அழைத்தனர். அதுவே பின்னாளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என அனைவராலும் அழைக்கப்பட்டார். இவர்களின் முதல் மகன் ராம்மோகன். தில்லியில் திட்டக்குழு இயக்குனராக பணியாற்றினார். இரண்டாவது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தற்போதைய காப்பாளராக உள்ளார். டாக்டர் முத்துலட்சுமி தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திலும் மகளிர் உரிமைகள் இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1929 ல் இந்திய மாதர் சங்கத்தின் சார்பில் பால்ய விவாக தடை சட்டம், பாலியல் தொழில் தடை சட்டம், பெண்கள் கோயில்களுக்கு அர்ப்பணிக்கபடுவதை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றவும் பெரும் முயற்சி எடுத்தார்.
தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்காக சென்னை அடையாறு பகுதியில் அவ்வை இல்லத்தையும் நிறுவினார். முதலில் தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமே என்று தொடங்கப்பட்ட இந்த விடுதி பிறகு அடைக்கலமும் கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் என்று மாற்றபட்டது. புற்றுநோயால் இறந்த தமது சகோதரி சுந்தராம்பாள் மூலம் அந்த நோய் தரும் துன்பம், வலி, வேதனை ஆகியவற்றை நேருக்கு நேர் பார்த்திருந்த முத்துலட்சுமி புற்றுநோய் கொடுமையில் இருந்து மக்களைக்காக்க சென்னை அடையாறில் நிதி வசூல் செய்து சிறந்த மருத்துவமனையைத் தொடங்கினார். ஆசியாவிலேயே புகழ் மிக்க புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார். இதில் ஆண்டுக்கு 80,000 நோயாளிகள் பயன் பெறுகின்றனர்.
சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினரும் இவரே. சென்னை சட்டமன்றத்தின் முதல் பெண் துணை தலைவர் என்ற பெருமைக்குரியவரும் இவரே. பல முதன்மைக்கு காரணமாக திகழ்ந்த இவர் இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் சென்னை மாநகராட்சி துணை மேயர். பெண்கள் முன்னேற்றத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்ட முத்துலட்சுமி ரெட்டி பெண்களுடைய துயரங்களை போக்க பெரிதும் பாடுபட்டார். தன் தங்கை புற்றுநோயால் மரணம் அடைந்ததால், புற்றுநோய் குறித்து மேல் மருத்துவம் கற்க விரும்பி டாக்டர் சுந்தரரெட்டியுடன் பாரீஸ் சென்று உயர் மருத்துவ கல்வி தொடர்பான கல்வியை கற்று வந்தார். பெண்களுக்கான சமூக நீதி கிடைப்பதற்காக முனைப்புடன் செயல்பட்டவர். பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க போராடியவர். பள்ளியில் படித்த பெண்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ஏழைப் பெண்களுக்கு கல்வி கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார்.
தேவதாசிப் பெண்கள் என்றழைக்கப்பட்ட இளம் பெண்களை கோவிலுக்கு நேர்ந்து விடும் கொடுமைக்கு எதிராக 1929 பிப் 2 ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தவர். ஆனால் இந்த மசோதா 15 ஆண்டுகளுக்கு பின்னர் தான் தேவதாசி முறை ஒழிப்பு சட்டமாக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் தேசியவாதி யான சத்திய மூர்த்தி பேசும் போது, மத விவகாரங்களில் தலையிட கூடாது என்றார். மதம் போய்விடும் என்றார். தாசிகளை ஒழிப்பது கலையை ஒழிப்பதற்கு சமம் என்றார். இதனை எதிர்த்து டாக்டர் முத்து லட்சுமிரெட்டி பேசும் போது “உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் இருந்து எந்தப் பெண்களையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா?” என்று கேட்டு வாதாடினார். இத்தனை காலம் எங்கள் வீட்டுப் பெண்கள் கலையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றியது போதும் இனி கொஞ்ச காலத்திற்கு உங்கள் வீட்டு பெண்களை தேவதாசியாக்குங்கள் என்றார். இதனால் சபையில் ஆண்கள் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். இந்த சட்டம் நிறைவேற ஈ. வே. ரா. பெரியாரும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் வெளியில் ஆதரவு தெரிவித்தார்கள். அதனால் பழமை வாதியான ராஜாஜி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் 1947ம் ஆண்டு இறுதியில் தான் “தேவதாசி ஒழிப்புச்சட்டம்” நிறைவேறி அமல்படுத்தப் பட்டது. சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனை உருவாக காரணமும் இவரே. 1952 -ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் அடிக்கல் நாட்டிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனை 1954 ஜூன் 18ல் செயல்பட தொடங்கியது. பெண்கள் நலனிலும் மருத்துவத் துறையிலும் இவர் ஆற்றிய அயராத சேவைக்கு இந்திய அரசு 1956 ல் முத்துலட்சுமி ரெட்டிக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது. பல சாதனைக்குரிய இவர் தனது 82 வது வயதில் 1968 ஜூலை 22 அன்று காலமானார். இவ்வாறாக பெண்கள் முன்னேற்றத்துக் காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்த முத்துலட்சுமி ரெட்டி பிறந்த புதுக்கோட்டையில் அவருக்கு மணிமண்டபம் இல்லை. இதை பெரும் குறையாகவே பெண்கள் சமுதாயமும், சமூகநல அமைப்புகளும் கருதும் நிலை நீடிக்கிறது. நவீனகால புதுமைப் பெண்களின் முன்னோடியாகவும் முதல் புதுமைப் பெண்ணாகவும் விளங்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவாரா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-தொகுப்பு வீ.செல்வராஜூ
ஓ.பி.ஆர். நினைவு தொண்டுஅறக்கட்டளை,
சென்னை.