ஒரு மனிதன் 60 வயதை தாண்டுவதே தற்போது அதிசயமான ஒன்றாக உள்ளது. மாசு கலந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், உணவு பழக்க வழக்கங்களாலும், வீரியமிக்க மருந்து வகைகளாலும் மனிதன் தனது உடலை தானே கெடுத்து கொண்டு வருகிறான். பல்வேறு காரணங்களால் தனது வாழ்நாளை கேள்வி குறியாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில் 100 வயதை கடந்த  மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் கூட பல்வேறு வீட்டு வேலைகளை தானே செய்து அசத்தி வருகிறார்.

       இவரது பெயர் கே.தனலட்சுமி அம்மாள் . திண்டிவனம்  கோணேரி குப்பம் கிராமத்தில்  வசித்து வரும்  இவர் கடலூர்  மாவட்டம் திருப்பணாம்பாக்கம்  கிராமத்தில்  ராமசாமி ரெட்டியார் – குப்பம்மாள் தம்பதியரின் 5வது பெண் குழந்தையாக  21.08.1920 அன்று பிறந்தவர்.நூறு வயதை நிறைவு செய்துள்ள தனலட்சுமி அம்மாள், திருப்பாவை, திருவெம்பாவை, வினாயகர்  துதி பாடல்களை  மளமள என ஒப்பிக்கிறார். இவர்,தின்ணைபள்ளியில் ஆரம்ப பாடத்தையும்,  எட்டாம்வகுப்பு வரை அச்சரபாக்கம் அரசு பள்ளியிலும் படிததவர்.அந்த காலத்தில் பெண்கல்வி என்பது தேவை அற்றது என எண்ணியிருந்த காலம் என்பதால், பள்ளிபடிப்பை நிறுத்திவிட்டு, தனலட்சுமியின் பெற்றோர்கள்  இவரது 14வது வயதில்1935ஆம் ஆண்டு ஆவனி மாதம், திண்டிவனம் தாலுக்கா கோணேரி குப்பம்  ஏகாம்பர ரெட்டியார் தைலம்மாள்  தம்பதியரின் புதல்வர்  A.கேசவரெட்டியார் என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர் .

அப்போது எங்க கல்யாணம்  மைலம் ரெட்டியார் சத்திரத்தில் நடந்தது. என் கல்யாணம் நடந்த போது என் சகோதரிங்க  இரண்டு பேர், என் சித்தப்பா பிள்ளைங்க மூணு பேருன்னு, மொத்தம் ஐந்து ஜோடி கல்யாணமும் ஒரே மேடையில நடந்தது. அப்படி நடத்துனா செலவு குறையும்.போக்கு வரத்து நேரம் மிச்சம்  ஆகும் அப்படின்னு சொல்லி அப்பெல்லாம் இந்த பகுதியில அப்படி தான் பல குடும்பங்களில் கல்யாணம் செய்தாங்க. ஊம்…. இப்ப எல்லாம் தாம் தூம்னு செலவு செய்யராங்க. கடன் வாங்கி கஷ்ட படராங்க,பாவம். எப்ப புரிஞ்சுக்குவாங்களோ நம்ம ஜனங்க  என ஆதங்க பட்டுக் கொண்டார் அனுபவம்  நிறைந்த பாட்டி.. காசு இருந்தா அதை நாலு ஏழைங்களுக்கு கொடுக்கலாம் என்று சொன்னவர்,
“சிரித்து வாழ வேண்டும்,
பிறர் சிரிக்க வாழக்கூடாது”- . என்கிறார்.
மேலும்
“ஒல்லும் வகையான் அறவினை  ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்”
எனத் திருக்குரள்  கூறும் இவர்  விடாமல் முடிந்த வரை எல்லா இடங்களிலும் தர்ம காரியங்களை செய்ய வேண்டும் என்கிறார்.

கேசவரெட்டியார்அப்பா ஏகம்பர ரெட்டியார் அதாவது எங்க மாமனார், கோணேரி குப்பத்தை சுற்றி உள்ள பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த பெரிய மிராசுதாரர். அப்பவே  அவர்,  11ஏக்கர் நிலத்தை துரௌபதி அம்மன் கோவில் கட்ட இலவசமாக வழங்கியவர். அதனால் தான் இன்றும் இந்த கோவில் விழா நிகழ்ச்சியின் போது முதல் மரியாதை  எங்க குடும்பத்திற்கு தருகிறார்கள்  என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்  தனலட்சுமி பாட்டி .

        தனது கணவர் கேசவ ரெட்டியார்  குறித்து சொல்லும்போது, ” எனது மாமனார் போலவே இவரும் சுற்றியுள்ள கிராமம் அனைத்திற்கும் நாட்டாமை செய்வார் . இவர் தனக்கு சொந்தமான  நிலத்தை  கிராம தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்கம்  தொடங்குவதற்கு  இலவசமா  கொடுத்தார். அதனால தான் கூட்டுறவு சொசைட்டி இந்த ஊருக்குவந்தது.. அவர்  தான் முதல்  கணக்கு தொடங்கனும்  அப்படின்னு சொன்னதால கூட்டுறவு  சங்கத்து மூலமா இந்த கிராமத்திலேயே முதன்முதல்ல நாங்க மாட்டு வண்டி வாங்கினோம்.அதனால தான் எங்க வீட்டை “வண்டி காரர் வீடு” ன்னு இன்னமும் கூட சொல்றாங்க” என மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
மேலும்  அவர் சொல்லும் போது, ” கோணேரி குப்பம்  கிராம ஏழைமக்கள், எங்க பண்ணையில வேளைசெய்தவர்களுக்கு எல்லாம்  வீடுகட்டிக்கொள்ள நிலத்தை பல பேருக்கு இலவசமா தந்தவர் எங்க வீட்டுகாரர். கிராமத்தில்  உள்ள ஏழைங்களுக்கு மந்தைவெளின்னு சொல்லுர  பயிற்சி கூடத்திற்கு இலவசமா இடம் தந்தார்  ரெட்டியார் . இதையெல்லாம் ஜனங்க வந்து இன்னைக்கும் என்கிட்ட வந்து சொல்வது தான் எனக்கு சந்தோஷமா இருக்குது. அடுத்தவங்களுக்கு  கொடுக்கிறது தான் உண்மையான மகிழ்ச்சி. அது தான்என்னை நூறு வயசு வரை வாழ வைக்கிறது”  என்கிறார்.

        வெள்ளைகாரன் காலத்தில் ஒரு முறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. எல்லாருக்கும் இலவசமா  ரெட்டியார் சோரு போட்டார் அப்ப ஒரு களம் நெல்லு மூனறை ரூபாய். அதனால தான்  அவரு ஏழைங்க மனசுல இன்னமும் வாழ்கிறார்.  எங்க வயல்ல தான் முதன் முதலில் மின்சார பம்பு செட் மோட்டார் 1958ல் போட்டோம் என பெருமையா சொல்லும் இவர், இந்த செல்வாக்கெல்லாம் இப்ப கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிக்கிடடே வருது.திண்டிவனம் பகுதி என்பதால் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரை பற்றி கேட்ட போது  ஓ.பி.ஆர். அண்ணன் பிள்ளைகள் கல்யாணத்திற்கு அவருடன் சென்றிருக்கிறேன். பெரிய வளவு ரெட்டியார் ரொம்ப  நேர்மையானவர்.கண்டிப்பானவர் என்று  எங்க வீட்டு காரர் ஓ.பி.ஆரை பற்றி பெருமையா சொல்வார்.

         எனக்கு அப்ப வயது 66. அதாவது 1986ல் என் கணவர் கேசவ ரெட்டியார் திடீர்னு மரணம் அடைஞ்சுட்டார். குழந்தை இல்லாத எங்களுக்கு , அவரோட அக்காபிள்ளைகளை  தத்து எடுத்து வளர்த்தோம். அவர்களுக்கு எங்க கிட்ட இருந்த நிலத்தை யெல்லாம்  அவர் இருக்கும் போதே ஏழைங்களுக்கு தானம் கொடுத்தது போக, மீதிய எழுதி வைச்சிட்டோம்..  என்னுடைய   வளர்ப்பு மகன், மகள்கள், சிறுவர்களாக இருக்கும் போதே, கணவர்  காலமானதால்  விவசாய  வேலையை  மேற்பார்வை பார்த்து அனைவரையும் கஷ்டபட்டு வளர்த்து கரையேற்றும் பொறுப்பும்  எனக்கே வந்தது. அவர்களையும் பாராட்டும்படி வளர்த்த பெருமை மூதாட்டி தனலட்சுமிஅம்மாளையே சேரும்.

        தனது 95 வயது வரை விவசாய வேலையை கருத்தாக பார்த்துவந்ததாக  சொல்லும் இவர், இன்னைக்கும்ஒரு ஏக்கர்ல சுரைக்காய்,  நிலக்கடலை நெல் விளைச்சல் இருக்கு என்கிறார். கடந்க  5 வருஷமாக என் பிள்ளைகள், பேர பிள்ளைங்க வீட்டில் ஓய்வெடுக்க சொன்னதால வயலுக்கு போரது இல்லை . விவசாயம்   குறித்த எல்லா விசயங்களையும்  அறிந்து வைத்திருக்கும் இவர் எந்த காலத்தில் என்ன பயிர் செய்யலாம், பயிர் நடவுக்கு ஏற்ற காலம் எது,  எவ்வளவு நாளில்  விளைச்சல் தரும்  நீண்ட கால, குறுகிய கால பயிர் என்னென்ன,  நீண்ட கால பயிர் குறித்தும் மகசூல்  குறித்தும் தன்னிடம் வருவோருக்கு ஆலோசனை தருகிறார். விவசாயம் குறித்த நுண்ணரிவு ஏறாளமா இவரிடம் புதைந்து கிடக்கிறதாக  இவரை  பாதுகாத்து வரும்  மகள் சந்திரா பெருமையுடன் தெரிவித்தார்.

         இவர் தனது வாழ்நாளில் இதுவரை நோய்க்கென்று ஊசி போட்டது கிடையாதாம். டாக்டரையும் இதுவரை சந்தித்தது இல்லை. ஆனால்  ஒரே ஒருமுறை  தவிர்க்க முடியாமல் கண் சிகிச்சை செய்திருக்கும் இவர், ஏதேனும் தலைவலி, காய்ச்சல் என்றால் நாட்டு மருந்து மட்டும் சாப்பிடுவாராம்.  காய் கறி பழங்கள் அதிகம்  விரும்பி சாப்பிடுகிறார். அவ்வப்போது இனிப்பு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அரசியல், சினிமாவில் இவருக்கு ஆர்வம் கிடையாது. பக்தி மட்டுமே இவரிடம் குடிகொண்டிருக்கிறது. எபாக்கம்  எல்லம்மாள்   கோயிலுக்கு தான் அடிக்கடி செல்வாராம். திருப்பதிக்கும்,திருவண்ணாமலைக்கும் ஓரிரு முறை போனதாக சொல்லும் இவர், மாலை வேளையில் வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றனும், அடுத்தவங்க மனசு புண்படாம எல்லாரும் நடந்துக்கனும்.யாருக்கும் மனசால கூட தீங்கு நினைக்க கூடாது என அறிவுரை கூறுகிறார்.

         திண்டிவனம் பகுதி என்பதால் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரை பற்றி கேட்ட போது  அவரது அண்ணன் பிள்ளைகளுக்கு கடலூர் பூங்கா வீட்டில் நடந்த  கல்யாணத்திற்கு சென்றிருக்கிறேன். அவர் நேர்மையானவர்.கண்டிப்பானவர் என்று  என் கணவர் சொல்வார். அவரது காலத்திற்கு பின் பொது வாழ்க்கையில்  நல்ல வங்க  அரிதாக  போயிட்டாங்க என்றவர் எனக்கு அரசியல் பிடிக்காது என்கிறார்.
 உணவு பழக்க வழக்கத்தை பற்றி கேட்ட போது, அதிகாலை 5மணிக்கே எழுந்து விடும் இவர், தனது காலைக்கடன் முடித்தவுடன் காலையில் வழக்கம்போல் 6மணிக்கு ஒரு காபி,  10மணிக்கு சாப்பாடு, மாலை 3மணிக்கு ஒரு காபி, இரவு 7 மணிக்கு மீண்டும் சாப்பாடு தான் எனது பழக்கம் .மாமிச உணவு சாப்பிடமாட்டேன். இதுவரை சாப்பிட்டதே இல்லை. சைவ சாப்பாடுதான் உடலுக்கு ஆரோக்கியமானது என்கிறார்.

         சராசரி மனிதர்களை போன்று  பலகாரம் சாப்பிட்டு வருகிறார். சுகர், பிரஷர் எதுவும் கிடையாது. இரவு முழுக்க நன்றாக தூங்குவார். காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து துடைப்பத்தை எடுத்து வீடு வாசலை கூட்டி பெருக்கி சுத்தப்படுத்தி இன்னும். கோலம் போடவெளியே வாசலுக்கு வந்து தண்ணீர் தெளித்து கூட்டி பெருக்குகிறார்.
இவரது வளர்ப்பு மகள் சந்திரா இவரை பற்றி கூறியதாவது:-“‘சராசரி பெண்களை போன்று அக்கம் பக்கம் வீடுகளுக்கு பேசுவதற்கு சென்று விடுவார். யாரிடமும் கோபப்பட்டு எதுவும் பேச மாட்டார். சென்னையிலே இருந்து  வரும்   பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்திகளுடன் சிரித்து விளையாடி மகிழ்வார். யாருக்கும் சிரமம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு கிடையாது. ஒரு குழந்தையை பார்ப்பது போன்று மிகவும் பேணி பாதுகாத்து பராமரித்து வருகிறோம். எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தனலட்சுமி அம்மாள் தெய்வம் போன்று இருந்து வருகிறார். எங்களது வாழும் தெய்வம் இவர்” என்று அவரது வளர்ப்புமகள் சந்திரா கூறுகிறார்.அப்போது ஆனந்த பிரம்மிப்பில் அவரை அறியாமலேயே அவரது கண்கள் கண்ணீரை வெளியேற்றியது.
          மூதாட்டியின் குடும்பத்தார் மட்டுல்ல, அந்த பகுதி மக்கள் அனைவருமே இவரை வணங்கி நூறாவது வயதை நிறைவு செய்ததால் பலரும் இவரிடம் , வாழ்த்தும் ஆசியும் பெற்று செல்வதுமாக அவரது வீடு குதூகலத்துடன்  காணப்பட்டது. வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு வரு வோரையும், போவோரையும் மலர்ந்த முகத்துடன் கண்டு புன்னகைக்கும் தனலட்சுமி அம்மாள் பார்க்கும் அனைவருக்கும் ஆசிவழங்கி ஆச்சரிய தாயாக தெரிகிறார். நேற்றைய தினம் 21.08.2020 அன்று மூன்று மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் திரு.ஜி.கிருபாகரன் அவர்கள் ஆசி பெற்று தன் முக நூல் பகுதியில் பதிவிட்டு பெருமை சேர்த்தார். அவரது உதவியுடன் தான்  தனலட்சுமி அம்மாளை தொடர்பு கொண்டோம். அவரது பேரன் காணொளி மூலம் ரெட்டி மலருக்கு தனலட்சுமிஅம்மாவுடன் நேர்கானல்  செய்ய உதவினார். தனலட்சுமி பாட்டி சொன்ன  அறிவுரைகேட்டு அனைவரும் நடந்தால் நிச்சயம் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நூறு வயசுவரை நீடிக்கும்.  நன்றி.

தகவல் பேரன் விஜயகுமார் , சாப்ட்வேர் இன்ஜினியர், சென்னை.

–ரெட்டிமலர்.

Loading

ரெட்டி மலர்-மாத இதழ்