இன்று அரசியல்வாதிகள், பேச்சாளர்கள் எல்லோரும் தாங்கள் பேசத் தொடங்கும்போது ‘பெரியோர்களே… தாய்மார்களே’ என்று சொல்லி தொடங்குகிறார்களே… இதனை முதன்முதலில் கையாண்டவர் ஓ.பி.ஆர்., அதனை தனது வாழ்நாள் முழுக்கவும் தொடர்ந்து பயன்படுத்தியவர் “முதல்வர்களின் முதல்வர்”என்றழைக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரே .
அவருடைய 50வது நினைவு நாள் இன்று. நேர்மையின் சிகரமாகவும், உண்மையின் உரைகல்லாகவும் திகழ்ந்த ஓ.பி.ஆரைப் பற்றிய நினைவில் கொள்ள வேண்டிய சில தகவல்கள் ஏராளம்…
சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர், 1947-ம் ஆண்டு மார்ச் 23முதல் 1949-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி வரை சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தார். முதல்வராக இருந்தபோதிலும், திண்டிவனம் அருகில் இருந்த தனது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்தே வாழ்ந்து வந்தார்.
விவசாயம் செழிக்க அவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட பயிர் காப்பீடு திட்டம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், கிணறு வெட்ட மானியம், விவசாயிகள் பயனடையும் வகையில் நெல், கரும்பு விலையை உயர்த்தியது, கீழ்பவானி அணைக்கட்டு, வீடூர் அணைக்கட்டு திட்டங்களுக்கு ஒப்புதல், பழைய நீர்நிலைகளைச் செப்பனிடுதல், புதிய நீர்நிலைகளை வெட்டுதல் என்று அவர் வகுத்த திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மைத்தொழில் செழிக்க வழிவகுத்தன.
இவரது ஆட்சியின்போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை முறைப்படுத்தும் சட்டம், ஜமீன்தாரி இனாம் ஒழிப்புமுறை, கோயில்களில் தேவதாசி முறை ஒழிப்பு, கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் பூரண மதுவிலக்கு ஆகிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன
இவர் அரசின் நிர்வாக நோக்கத்திற்காக சென்னை மாகாணத்திற்கு என்று தனியாக ஒரு சின்னம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.அதன்படி அமைச்சரவையை கூட்டி தமிழக அரசின் அதிகாரபூர்வ சின்னமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம் ஏற்பது என்று அமைச்சரவை முடிவு செய்தது. கோபுரம் சின்னத்தைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினார். மதச் சார்பற்ற நம்நாடு ஒரு மதச் சின்னத்தை, “இலச்சினை’யாக அனுமதிக்கக் முடியாது என்று. கூறி அனுமதி மறுத்து விட்டார் நேரு. உடனே நேருவுக்கு கடிதம் எழுதி, “கோபுரம் மதச் சின்னமல்ல; தமிழக கட்டடக் கலைக்கு உரிய சிறப்பு கோபுரத்திற்கே உண்டு. மகாத்மாவின் நண்பரும் கிறிஸ்தவ பாதிரியாருமான ஆண்ட்ரூஸ், தமிழ்நாட்டில் திருப்பத்தூரில் கட்டிய மாதாகோவில் கூட இந்துமத கோபுர வடிவில் தான் அமைக்கப்பட்டது!’ என்று விளக்கினார் ஓமந்தூரார். அதன் பிறகு நேருவும் அனுமதி கொடுத்தார். பின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.
ஓ.பி.ஆர்.ஆட்சியில் உணவுப் பற்றாக்குறை நிலவிக்கொண்டிருந்த அச்சூழலில், கடலில் மீன் வளத்தைப் பெருக்க வேண்டும் என அதிகாரிகளை அழைத்து ஓமந்தூரார் கோரிக்கை வைக்கிறார். கடல் வளத்தை பன்மடங்காக்க, ‘ப்ளூ ரெவல்யூசனை’ உருவாக்க வேண்டும் என்பது அவர் திட்டமாயிருக்கிறது. அதுகுறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
அப்போது மீன் வளத்துறை இயக்குநராக இருந்த அப்பாஸ் கலிலீ, ‘அது அவ்வளவு எளிதன்று. கடல் என்றால் அதில் எல்லா இடங்களிலும் மீன் கிடைத்துவிடாது’ என அலட்சியமாக மறுத்துவிடுகிறார். ‘ஆம், கடலிலும் ‘கான்டினன்டல் ஷெல்ஃப்’ என்று குறிக்கப்படும் பகுதிகள் மட்டும்தான் மீன்பிடிக்க ஏற்றவை. அதற்கும் நார்வே போன்ற நாடுகளில் பல புதிய முறைகளை கையாளுகிறார்கள்’ என ஓமந்தூரார் சொல்லியதும் கலிலீ வாயடைத்துப் போயிருக்கிறார். சைவ உணவை மட்டுமே உட்கொண்ட ஓமந்தூரார், அசைவ உணவு மூலமாவது மக்களின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க முயன்றிருக்கிறார். ஐ.சி.எஸ் படித்த அதிகாரிகளால் யோசிக்க முடியாதவற்றைக்கூட பட்டிக்காட்டு முதலமைச்சர் என்று சொல்லக்கூடிய ஓமந்தூரார் யோசித்திருக்கிறார் என்று பலரும் வியந்தனர்.
இவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை அமைந்தகரையில் மேற்குக் கோடியில் 10 ஏக்கர் நிலம் வழங்கினார்.இன்று கொரானா நோய் தொற்றுக்கு பலருக்கும் தீர்வு தரும் இடமாகவிளங்குகிறது. அதுதான் சித்த மருத்துவத் தலைமையகமாகவும்,ஆராய்ச்சி நிலையமாகவும் அறிஞர் அண்ணா பெயரால் திகழ்ந்து வருகின்றது.
ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய நாட்டுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாதுக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என படேலுக்கு ஒமந்தூரார் எச்சரிக்கை செய்தார். அதன் பின்னரே ஹைதராபாத் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டது. இந்த அரும்பணிக்காக படேல் அவர்கள் ஒமந்தூராரை மனம் திறந்து பாராட்டினார். ஆனால் பின்நாளில் எழுதப்பட்ட வரலாற்றில் ஒமந்தூராரின் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
ஓமந்தூரார் தனது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கை கொண்டு வருவதில் அதிக அக்கறைகாட்டி வெற்றி கண்டவர். அன்றைய தமிழகத்தின் 25 மாவட்டங் களிலும் மதுவிலக்கை வெற்றிகரமாக அமுல்படுத்தியவர் ஓமந்தூரர். அவர் போற்றிய மதுவிலக்கு கொள்கை யான ‘முழு மது விலக்கு; அதுவே நமது இலக்கு’ என்ற முழக்கத்துடன், இளைஞர்கள் செயல்பட முன்வர வேண்டும்
ஒரு முறை, திருப்பதியில் அமைந்திருந்த ஓலைச்சுவடி நூலகத்தை ஓமந்தூரார் பார்வையிடச் சென்றபோது அவரைச் சொற்பொழிவாற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள். தமிழில் பேசத் தொடங்கிய அவரைத் தெலுங்கில் பேசுமாறு கூறினார்களாம்.“எனக்குத் தெலுங்கு தெரியாது. என் தாயாருக்குத் தெலுங்கில் பேச்சுவழக்குச் சொற்கள் கொஞ்சம் தெரியுமென்றாலும், தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. என் தாய்மொழி தமிழ். நான் தமிழன். என் தாய்மொழியாகிய தமிழிலே பேசுகிறேன்” எனத் தயங்காது கூறினாராம். இவர் ஆட்சியில்தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்பட்டது. தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. திருக்குறள் முதன்முதலாகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டதும் இவர் ஆட்சியில்தான்.
ஓமந்தூரார் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று பிற்படுத்தப் பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும்தலா 14 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கி ஆணை பிறப்பித்ததன் மூலம் இந்தியாவில் முதன் முதலில் தனி இட ஒதுக்கீடு தந்த முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கக் கூடாது, நிர்வாகத்துக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது, மக்களோடு மக்களாக அவர்கள் வாழ வேண்டும், தேவையில்லாமல் தலைமைச் செயலகத்துக்கு வரக்கூடாது என்று கண்டித்தார். “MLA சொல்கிற சிபாரிசுகளை புறக்கணித்து விடுங்கள். மக்கள் குறைகளைக் கேட்டு அந்தக் குறைகளை நிவர்த்திக்க வேண்டும். எது சரியோ, அதைச் செய்யுங்கள். தூய்மையான நிர்வாகத்துக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள். எம்.எல்.ஏ. தலையிட்டார், அதற்காக இப்படி உத்தரவு பிறப்பித்தேன் என்று சொல்லக் கூடாது” என்று மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இது காங்கிரஸ் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்க்கு கடுப்பைக் கிளப்பியது. பலரும், அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதை மீறி நிர்வாகத்தில் தலையிட்டு அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என்று உத்தரவு போட்ட நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது விசாரணை கமிஷன் வைத்தார். இப்படிப்பட்ட முதலமைச் சரை எந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப் பார்கள்?
அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து, “மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் நாம் பதவியில் இருக்கிறோம். பெரிய ஆட்களுக்கு சலுகைக் காட்டுவதற்காக அல்ல…” என்று கண்டித்தார். அமைச்சர்கள் தேவையில்லாமல் சுற்றுப்பயணம் போகக் கூடாது, சுற்றுப் பயணங்களைக் குறைத்துவிட்டு தலைமைச் செயலகத்தில் உட்கார்ந்து கோப்புகளைப் படித்து தனக்கு முன்னால் இருக்கும் விவகாரங்களை விரைந்து முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டார். அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் என்று போய் விட்டுச் சொந்தப் பணிகள் பார்ப்பவர்களைகண்டித்தார் .இதனால் சொந்த கட்சிக்காரர்களே கூக்குரலிட்டனர்.
ஓமாந்தூரார் ‘எனக்கு எந்த கசமுசாவும் பிடிக்காது. தப்பு செய்கிறது யாராக இருந்தாலும் விட மாட்டேன். கட்சி எனக்குப் பெரிதில்லை. ஒழுக்கமும் சத்தியமும் தர்மமும்தான் எனது குறிக்கோள். இதற்கு மேல் ஒரு நிமிடம்கூட இந்த பெரிய பொறுப்பில் இருக்க மாட்டேன்’ என படபடத்தார். நேர்மையாளரான ஓமாந்தூராரை பதவியில் இருக்க விடாமல், சில ஆதிக்க சக்திகளால் ஏற்பட்ட பிரச்சினையில், வில்லை முறித்து போட்டுவிட்டு, திருதிராஷ்டிரன் சபையிலிருந்து விதுரர் விலகியதுபோல அசால்டாக விலகினார். இந்த தைரியமும் நடவடிக்கையும் யாருக்கு வரும்? பதவியை விட்டு விலகியவுடன், தன்னுடைய பிரதமர் இல்லமான ராஜாஜி ஹாலுக்கு அருகே உள்ள கூவம் ஹவுசுக்கு வந்தார். அண்ணா சாலையில், தர்பார் ஓட்டலுக்கு எதிரே உள்ள டாக்சி ஸ்டாண்டில் ஒரு காரை பிடித்தார். பிரதமராக இருப்பவர் பதவி விலகினாலும், அரசு வாகனத்தை தன்னுடைய சொந்த ஊர் வரை பயன்படுத்தலாம். ஆனால் பதவி விலகிய அடுத்த நிமிடமே அரசு சலுகைகளை உதறி தள்ளினார். கூவம் ஹவுசிலிருந்த தனது துணிமணிகளையும், தனது புத்தகங்களையும், தனக்கு சொந்தமான பாய், தலையணைகளையும் எடுத்து கொண்டு வடலூருக்கு பயணமானார் என்று எஸ்.எஸ்.மாரிசாமி கூறினார்.
ஓமந்தூரார் பதவி விலகிய அன்று, ‘வழியனுப்புகிறோம்’ என்ற தலைப்பில் ‘விடுதலை’ நாளிதழ் எழுதிய தலையங்கத்தின் வரிகளைக் கவனியுங்கள், இன்றும் சத்தியமான சொற்கள் அவை.
“ஓமந்தூரர் ரெட்டியார் அவர்களே போய் வாருங்கள்; கிராமத்துக்குப் போங்கள்; நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வழியனுப்புகிறோம். நேர்மையற்ற உலகம் இது. நாண யத்துக்கு இந்த உலகத்தில் இடமில்லை. யோக்கியனுக்கு அரசியலில், அதிகாரத்தில் இடமில்லை என்ற உண்மையை, பொய்யாப் பழமொழியை நிலைநாட்டி விட்டுச் செல்கிறீர்கள். அது ஒன்றுதான் தாங்கள் செய்த சேவைகளில் எல்லாம் சிகரம் போன்றது, போய் வாருங்கள். போர்க்களத்தில் முதுகுப்புறமாகக் குத்தப்பட்ட வீரர் தாங்கள். காயம் மார்பில் அல்ல… முதுகில். பகைவனால் அல்ல… பச்சோந்தித் தோழனால். பரவாயில்லை. இது தான் உலகம். நன்றி கெட்ட உலகம். போய் வாருங்கள்!” என்று எழுதியது ‘விடுதலை’
25-8-1970 அன்று உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் காலமானார்.
அவர் மறைந்தாலும் முற்றிலும் தூய்மையும் நேர்மையும் மிக்க முதல்வர் ஓமந்தூரார் என்னும் புகழ் நம் நாட்டு வரலாற்றில் என்றும் நின்று நிலவு.
அண்ணாரது 40 வது நினைவு நாளில் சென்னை ரெட்டி இளஞர் பேரவை எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக மத்திய அரசு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது. நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் திகழ்ந்த ஓமந்தூராருக்கு தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் ஒரு சிலைகூடக் கிடையாது . ஓ.பி.ஆர்.அவர்களின் திரு உருவ சிலையை சென்னையில் நிறுவ இந்த 50 வது நினைவு நாளில் கோரிக்கை வைக்கிறோம்.
ஓ.பி. ஆர் குறித்த நல்ல முன்னுதாரணங்களை மறுபடியும் மறுபடியும் அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்.அவரது கனவுகள் பலிக்கும் நாளுக்காகக் காத்திருக்காமல், அதனை நனவாக்கும் உள்ளங்கள் ஒன்றினைந்து சாதிப்போம் என இந்நினைவுஉறுதிஏற்போம்.
கட்டுரையாளர்.வீ.செல்வராஜூ, வரலாற்று ஆய்வாளர்.
oprtrust2020@gmail.com
9444077722