திவான்பகதூர் சுப்பராயலு ரெட்டியார்
தென் ஆற்காடு மாவட்டம் தமிழக வரலாற்றில் தென் ஆற்காடு மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த மாவட்டத்தில் பிறந்த போற்றுதற்குரிய இருபெரும் முதல்வர்கள் தமது தியாகத்தால் பெருமை சேர்த்தவர்களாவர். தியாகம் என்றால் இருப்பதை இழப்பதுதான்.
 
கடலூர் சுப்பராயலு ரெட்டியார் (நீதிக்கட்சி) கடலூருக்கு அருகில் உள்ள அகரம் என்ற சிற்றூரில் தோன்றிய சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் அக்காலத்திலேயே இலண்டன் சென்று உலகிலேயே உயர்ந்த வழக்கறிஞர் பட்டமான பார்-அட்லா பயின்றவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்கும் விதமாக தோற்றுவிக்கப்பட்ட சென்னை ராஜதானி (தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவை உள்ளடக்கியது). மாகாணத்தின் சட்டசபைக்கு முதலாவது முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது காலத்தில் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை சட்டத்தை அமலாக்கினார். இவர் தென் ஆற்காடு மாவட்ட கழக தலைவராகவும் கடலூர் நகர்மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
 
தனது பதவி காலத்தில் மிக நேர்மையாக வாழ்ந்து காட்டி தனது சொத்துக்களை பொது பயன்பாட்டிற்கு தானமாக வழங்கினார். தனது கிராமமான அகரத்தில் இருந்த 31 ஏக்கர் நிலத்தையும், தற்போது கடலூர் நகரில் மிகப்பிரதானமான இடத்தில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவில் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபம் உள்ள இடத்தையும் ஏழை மாணவர்களின் கல்விக்காக தானமாக வழங்கினார். இவர் வாழ்ந்த (5 ஏக்கர்) இடத்தை அரசுக்கு கொடுத்தார். அதில் தற்போது நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறை அலுவலகங்கள் உள்ளன. அவர் தானமாக வழங்கிய சொத்துக்களின் இன்றைய மதிப்பு சுமார் 100 கோடி ஆகும்
 
சென்னை இராஜதானியில் முதல் முதலமைச்சர்  வள்ளல் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் 100 ஆண்டு திவான்பகதூர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர். (1920-21). அன்றைய சென்னை மாநிலம் என்பது ஒரிசாவின் கஞ்சம் பகுதிகள், ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் இராயசீமா பகுதிகள், இன்றைய சென்னை மாநிலம் (புதுக்கோட்டை சமஸ்தானம் தவிர) கேரள மாநிலத்தின் திருவாங்கூர் கொச்சி சமஸ்தானம் தவிர பிறபகுதிகள் கர்நாடகத்தில் சில மாவட்டங்கள் உட்பட்டதாகும்.
இவர் 1855 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி கடலூர் வட்டத்தில் உள்ள சிறிய கிராமமான அகரம் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் மணியக்காரர் ஆவார். தன்னுடைய கல்லூரிப் படிப்பினை சென்னை மாநிலக்கல்லூரியில் கற்றார். இவருடைய வகுப்பு நண்பர் தான் நீதிக்கட்சியின் தலைவரான பி.டி. தியாகராயர் ஆவார். கல்லூரி படிப்பை முடித்த பின்பு இலண்டன் சென்று வழக்கறிஞர் பட்டம் பெற்று திரும்பினார். லண்டனில் படித்தவர்கள் எல்லாம் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுவது தான் வழக்கம். ஆனால் இவரோ கடலூர் சென்று தன்னுடைய வழக்கறிஞர் பணியை தொடர்ந்தார். பொதுப் பணிகளில் அக்கறை கொண்டு தன்னை காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். கடலூர் வட்ட கழகத்தின் தலைவர் ஆனார் (1912). கடலூர் நகர மன்றத் தலைவராக 14 ஆண்டு காலம் பணியாற்றியவர். மின்டோமார்லி சீர்திருத்த சட்டத்தின் கீழ் நடைபெற்ற 1913-1916 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினரானார். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் கீழ் நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது முறையாக சட்டமன்ற மேலவை உறுப்பினரானார். 1916 ஆம் ஆண்டு பி.டி. தியாகராயர் அவர்கள்  நீதிக்கட்சியைத் துவக்கிய போது காங்கிரஸிலிருந்து விலகி தன்னை நீதிக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.  1917ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டக்கழக தலைவரானார். அரசு பணியில் இல்லாதவர்களில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாவட்ட கழக தலைவர்.
பிராமணர் அல்லாதவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பங்கினை பெற்றுத்தர ஆங்கிலேய ஆளுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட நீதிக்கட்சி அமைத்த குழுவில் அங்கம் வகித்தார். கமிட்டியில் உறுப்பினராக இருந்தார். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் கீழ் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை கொண்டு வரப்பட்டது. நீதிகட்சி பெரும்பான்மை பலம் பெற்றது. பி.டி. தியாகராயர் அவர்களை முதலமைச்சராக பொறுப்பேற்க ஆளுநர் அழைத்தார். அப்பொறுப்பினை ஏற்க கட்சித்தலைவராகவும், சென்னை நகரத்தலைவராக இருந்த தியாகராயர் விரும்பவில்லை. “எனது கட்சியை சேர்ந்த என்னை விட பெரியவர்கள் ஆட்சி அமைக்க” அவர்களை நெறிப்படுத்துவேன், என்று கவர்னருக்கு தெரிவித்தார். கடலூர் திவான்பகதூர் சுப்பராயர் அவர்கள் முதலமைச்சராக பரிந்துரை செய்தார். இவர் 17.12.1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கல்வி, சுங்கம், பொதுப்பணிகள் ஆகிய துறைகள் இவர் வசம் இருந்தன. இவரது அமைச்சரவையில் இடம்பெற்ற மற்ற அமைச்சர்கள் பனகல் அரசர் ராமராயநிங்கர் (உள்ளாட்சித்துறை) கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (வளர்ச்சித்துறை). பதவியேற்ற 7 மாத காலத்திற்குள் சுப்புராயலுவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. எனவே ஜூலை 11, 1921 அன்று தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் பனகல் அரசர் முதல்வரானார்.
 
தொகுத்தவர்:
திரு. சந்திரசேகர் 
செயற்பொறியாளர், ஓய்வு 
கவரை தெரு சைதாப்பேட்டை.
ரெட்டி மலர்-மாத இதழ்