Annamalai Reddiar

முனைவர்சி.சேதுராமன்

இசைத்தமிழ், மாந்தர்நெஞ்சங்களை இசையவைக்கும் திறன்கொண்டது.  மக்கள் விரும்பும் பலவகை இசைகளில்  “சிந்துஇசை” என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச்செய்து, நாடி, நரம்புகளைத் தூண்டித் துள்ளச்செய்யும்.  சிறுவர் முதல் பெரியோர் வரையிலும் கற்றோர் முதல் கல்லாதார் வரையிலும் ஏற்கச் செய்யும் ஒப்பற்ற இசை வடிவானது காவடிச்சிந்து.

இது புதிய தொரு இலக்கிய விருந்தாகும். இப்புதியவிருந்தை உருவாக்கி வழங்கியவர் ஓர் இளைஞர்.  அவர் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும்.  அவர்தான் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்.

தென்பாண்டிச் சீமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூரில் 1860ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியார் – ஓவு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.  அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலை ரெட்டியாருக்குக்கிட்டியது.  அவருக்கு, சிவகிரி முத்துசாமிப் பிள்ளை என்பவர் ஆசிரியராக அமைந்தார்.  அவ்வாசிரியர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலை யாருக்குக் கற்றுக்கொடுத்தார்.  ஒருநாள், அண்ணாமலையார் பாடத்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக்கருதிய ஆசிரியர், அவரைக் கண்டிக்கக்கருதினார்.  தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக்கூறுமாறு ஆசிரியர்கேட்டார்.  விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார், தங்குதடையின்றி ஒப்பித்துவிட்டார்.  அதைக்கண்டு வியந்த ஆசிரியர் அவரைப் பாராட்டினாராம்.

ஒருமுறை அண்ணாமலையார்,  வீட்டுப் பாடம் எழுதி,  அதன்கீழ்  “தமையபருவதம்” என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். தமையபருவதம் என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை. ஆசிரியர் அண்ணாமலையை அழைத்து, “அண்ணாமலை! தமையபருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன?” என்று வினவினார். அதற்கு அண்ணாமலையார், “தமையன் என்றால் அண்ணா; பருவதம் என்றால்மலை.  அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன்ஐயா”  என்று பணிவுடன் கூறினார்.  அதைக்கேட்ட ஆசிரியர், “அப்பாஅண்ணாமலை!  உன்புலமைப் பசிக்கு நான் தீனிபோடமுடியாது. நீ வேறு எங்கேனும் சென்று பயில்க” என்று ஊக்கப்படுத்தி,  அவருக்கு விடை கொடுத்து அனுப்பினாராம்.

சென்னிக்குளத்தில் உள்ளமடத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்துகொண்டிருந்த சுந்தர அடிகளுடன் தொடர்புகொண்டு,  அவரிடமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப்படித்தார்.  அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக்கண்ட அடிகளார், தாம் கற்றிருந்த நூல்களை எல்லாம் அவருக்குக் கற்பித்தார். விவசாயத்தில் விருப்பமில்லாத அண்ணாமலையார்,  தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சினார். கவிதைக்கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். கடமையைமறந்தார். ஒருமர நிழலில் கற்பனையில் ஆழ்ந்தார். வாய்க்காலில் வந்ததண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தரிசில் பாய்ந்தது. அதைக்கண்டு சீற்றம் கொண்ட அவரதுதந்தை, அவரைக் கடிந்துகொண்டு, வீட்டுக்கு அவர்வந்தால் சாப்பாடு கிடையாது என்று கூறிவிட்டார். தந்தையாரின் சினத்துக்கு ஆளான அண்ணாமலை, சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக்கண்ட அடிகளார், அவருக்கு இரங்கி உணவும் தந்தார்.

தம் மகன் பிச்சைக் காரனைப்போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்குவந்து அண்ணாமலையை அடித்தார் தந்தை. இதனைக் கண்ட சுந்தர அடிகளார், “இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள்.  இவன் புகழின் உச்சியைத் தொடப்போகிறான்.  நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன்”  என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தினார்.

அண்ணாமலையை சேற்றூர் அரசர் வடமலைத் திருவநாதசுந்தரதாசுத் துரையிடம் அழைத்துச் சென்று அவரைப் பற்றி பாடல்கள் பாடுமாறு அண்ணாமலையைப் பணித்தார். அண்ணாமலையார் பாடியபாடல்களைக் கேட்டஅரசர், “இந்தச் சிறுவன் இவ்வளவு சிறந்த பாடல்களை எங்ஙனம் இயற்ற இயலும்!  இவன் பாடிய பாடல்கள் இவனுடையது அல்ல என்று கருதுகிறேன்” என்றார். அரசரின் உரையைக் கேட்ட அடிகள் மனம் வருந்தினார். எவ்வாறேனும் அண்ணாமலையின் திறமையை அரசர் உணரும் வண்ணம் செய்ய வேண்டும் என்று கருதினார்.

அரசரைப்பார்த்து, “இவன் செய்யுள் இயற்ற வல்லவனா? ஆற்றல் இல்லாதவனா என்பதைத் தாங்கள் பரிசோதித்து உணரலாமே” என்றார். அரசரும் அண்ணாமலையைப் பார்த்து, “காரிகை என்னும் சொல் ஒரே செய்யுளில் ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள்பட வருமாறு அகப்பொருள்துறை அமைய ஒரு கட்டளைக்கலிப்பா இயற்றுக” என்றார். அண்ணாமலை உடனேபாடினார். பாடலைக் கேட்டுமன்னர் அயர்ந்து போனார். அண்ணாமலையின்திறமை கண்டுவியந்தார். அவரது கவித்திறமை கண்ட அரசர், அவரை முகவூர் இராமசாமிப் புலவரிடம் இலக்கணம்கற்பதற்கு அனுப்பினார். அண்ணாமலையும் நாள்தோறும் அரண்மனையில் உணவருந்தி முகவூர் சென்று இலக்கணம் கற்றுவந்தார். பல்வேறு இலக்கண, இலக்கிய அறிவும்,  இசைப்பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய அண்ணாமலையார், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அதன் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டார். மேலும், அப்போது ஆதீனத்தில் இருந்த உ.வே.சாமிநாதய்யரிடம் நன்னூலும், மாயூரபுராணமும் பாடம்கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப்பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணிய தேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார். திருவாவடு துறையிலிருந்து சென்னிக்குளம்வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக அமர்ந்தார்.

ஊற்று மலையரசரின் குல தெய்வமாகிய வீர கேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார். மேலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் மீது சங்கரன் கோவில்திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார்.

வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம் புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார்,  கரிவலம் வந்தநல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித் துரைத் தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் பழகிய சமகாலத் தவர் ஆவர்.

“சீர் வளர் பசுந்தோகை மயிலான் – வள்ளி
செவ்விதழ் அல்லாதினிய
தெள்ளமுதும் அயிலான்
போர் வளர் தடங்கையுறும் அயிலான் – அவன்
பொன்னடியை இன்னலற
உன்னுதல் செய்வாமே.”

என்று தொடங்கியபாடலை, ஒரு முறை கழுகு மலைக்குக்காவடி எடுத்த போது வழி நெடுகத் தொடர்ந்து பாடிக் கொண்டே சென்றார்.

பாடல் கேட்ட அனைவரும் “முருகா முருகா” என்று கூறி மெய்மறந்தனர்.

எத்தனையோ பாடல்கள்! ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சந்தம்! வெவ்வேறு மெட்டு, வெவ்வேறு துறை. எல்லாம் புதுமை, எதுகை, மோனைகள் வந்து ஏவல் கேட்டன.

இயை புத்தொடை அடி தோறும் அணிவகுத்துநின்றது.  அன்றிலிருந்து, “வாக்கிற்கு அருணகிரி” என்றவாசகம், “வாக்கிற்கு அண்ணாமலை” என்று விரிந்தது. பழைய பாடல்களின் சாயல் அறவே இல்லாத புதுவகை நாட்டுப் பாடலாகக் காவடிச் சிந்து மலர்ந்தது.

அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச் சிந்துப்பாடல்களே ஆகும். காவடிச் சிந்து மட்டும் அவர்காலத்திலேயே அச்சாகிவிட்டது. 

வழிநடையில் பாடப்பட்ட காவடிச் சிந்துப்பாடல்களை எல்லாம் ஊற்று மலையரசர் திரட்ட முயன்றார்.  இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசு கவியாகப் பாடப்பட்ட மையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்று மலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச் சிந்து எனப் பெயரிட்டு,  ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார்.  காவடிச் சிந்துநூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார், ஊற்று மலையரசரையும், அச்சிட்ட நெல்லையப் பக்கவிராயரையும் பாராட்டி, ஐந்துகவிகள் பாடியுள்ளார். காவடிச் சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின.  அண்ணாமலையார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அண்ணாமலையாருக்கு அவரது தந்தையார், காலம் தாழ்த்தாது அவரது இருபத்து நான்காம் வயதில், குருவம்மா என்ற பெண்ணை மணம் முடித்துவைத்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை, நெடுநாள் இன்பமாகவாழ இயலவில்லை.  அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளரை தீராத நோய்கவ்வியது.  அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு. தம் அவைக் கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பல வித மருத்துவங்கள் செய்தும் நோய்நீங்கவில்லை.

1891 ஆம் ஆண்டு தைமாதம் அமாவாசையன்று தமது  29-வது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். பொன்னுடம் புநீங்கிப்புகழுடம்பு எய்தினார். காவடிச்சிந்து புகழ் அண்ணாமலையார் மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச் சிந்து என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இத்தகைய சிறப்பும் பெருமையும் கொண்ட “காவடி சிந்து” பாடல்களை இன்று உலகம் முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் பணியை கையில் எடுத்துள்ள இளைஞர் மோனிகா சதீஸ் அவர்களின் பணி பாராட்டுக்குறியது. காவடி சிந்து பாடல்களை போட்டி நடத்தி அதன்மூலம் இன்றைய குழந்தைகளை படிக்கவும் வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளை ஊக்க படுத்திட ஆறுதல் பரிசு பதினைந்து குழந்தைகளுக்கு தலா ரூ.1000- வீதம் வழங்கிட  ரூ.15,000/- எங்கள் அமைப்பு சார்பில் வழங்கியிருக்கிறோம். நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்கும் பணியில் கழுகுமலை முருகனின் அருளையும் பெற்று சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் புகழ் பரப்பும் அவரின் பணி சிறக்க ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பில் வாழ்த்துகள். 

– வலைதளத்திலிருந்து தொகுத்தவர் வீ. செல்வராஜூ

Loading

ரெட்டி மலர்-மாத இதழ்