வெறும் சோப்பு நுரைகளில் உயிரை மாய்த்துக் கொள்ளும் கரோனா தீநுண்மி வைரஸ் கிருமி, உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தியும், மனித சமுதாயத்தை வீட்டுக்குள்ளே சிறை வைத்து விட்டதையும் நாம் கடந்த சில மாதங்களில் நன்கு உணர்ந்துள்ளோம். மனதளவில் கரோனா ஏற்படுத்தியிருக்கும் இந்த மாற்றத்திலும், பாதிப்பிலும் இளைஞர்கள் உறைந்து ஓய்ந்து விடாதிருக்க, நல்ல பல ஆலோசனைகளை வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

  1. இயக்கம் இல்லாத வாழ்வு, ஓடாத நதி, வீசாத தென்றல், பாடாத பறவை, சுழலாத ரத்தம் என்று உணர்வோம்.
  2. உழைப்பு இருந்தால் மட்டுமே, ஓய்வு உத்தமம்.
  3. பல்லாண்டுகள் சிறைபட்டு விடுதலைக்கு உழைத்த வீரர் களின் தியாகத்தை அறிவோம்.
  4. பழைய வாழ்க்கையே மீளாதா? என்ற ஏக்கத்தில் திருப்தியடைய பயில்வோம்.
  5. மனிதன் எப்போதும் சமூக விலங்குதான்.
  6. சிக்கனத்தின் அருமையை அறிவோம்.
  7. குறைவான பொருள்களுடன் நம்மால் நிறைவாக வாழ முடியும்.
  8. மனித அறிவு அணுவளவே என அறிந்து ஆணவம் உதிர்ப்போம்.
  9. பார்ப்பதற்கு செலவழித்த நேரத்தையெல்லாம் படிப்பதற்குப் பயன்படுத்துவோம்.
  10. இந்த நொடியே சத்தியம் என நொடிக்கு நொடி வாழப் பயில்வோம்.

விளங்கச் சொன்னால், வாழ்க்கை எப்போதும் சமதளமாய் இருப்பதில்லை. ஒவ்வொரு மேடு தென்படுகிற போதும், அதற்கு அடுத்தது பள்ளம் ஒன்று இருக்கிறது என்று அறிவதே பகுத்தறிவு. சமவெளிக்குச் சென்றால் தூரத்தில் இருக்கும் மலை துல்லியமாகத் தெரிவதைப் போல நெருக்கடிகள் ஏற்படுகிற போது, இதனால் வரை நாம் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்பதை அறிந்து கொள்கிறோம். இழக்கும் வரை இருப்பவற்றின் அருமை தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.

வெளியில் செல்ல முடியாத சூழல் வந்து விட்டது என்று கப்பல் மூழ்கியதாய் கவலைப்பட்டு, கன்னத்தில் கைவைத்து, கண்ணீர் சிந்துவதில் பயனில்லை. இந்த ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதில் தான் எதிர்காலத்தின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

இது நாள் வரை நாம் ஓடிக் கொண்டே இருந்தோமே ஒழிய, உட்கார்ந்து கடந்த காலத்தை கடைவாயில் போட்டு அசைப் போட்டிருப்போமா, யார் ஒருவர் வாழ்ந்ததை நினைவு எனும் திமிசுக் கட்டையால் திடப்படுத்திக் கொள்கிறார்களோ, அவர்கள் வருங்காலத்தில் கடந்த காலத்தில் செய்த தவறுகளைத் தவிர்க்கிறார்கள். எதிர்காலத்திற்கான வளமான அலங்கார வளைவுகளை அமைக்கிறார்கள். நாம் அவ்வப்போது கோடரியைத் தீட்டினால், கூர்மையான ஆயுதத்தால் விரைவாக முடியும் வேலை. இப்போது ஆற அமர்ந்து நம் கடந்த காலத்தைக் குறித்து சிந்திப்போம். எங்கெல்லாம் இடறி விழுந்திருக்கிறோம். எங்கெல்லாம் நிதானித்து பயணித்திருக்கிறோம். எங்கெல்லாம் இன்னும் வேகமாய் சென்றிருக்க வேண்டும் என்று நினைவுப் படுத்தி பார்ப்போம். ஆழ்மனதிற்குள் அந்த எண்ணங்களை அனுப்புவோம். அவை எதிர்காலத்திற்கு நாம் உச்சரிக்கும் எச்சரிக்கையாய் நம்மை நச்சரித்து நல்வழிப்படுத்தும்.

நன்றாக வாழ்கிறவன், வாழ்க்கை நீளமானது தான் என்று சொன்னான். நாம் எதை வாழ்க்கை என்று கணிக்கிறோம் என்பதில் தான், வாழ்வின் நீள அகலம் அடங்கியிருக்கிறது. செறிவாக உண்கிறவனுக்கு உடனே பசி எடுப்பதில்லை. மென்று தின்பவனுக்கு நிறைய சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதில்லை. முறையாக வாழ்கிறவனுக்கு 50 ஆண்டுகளே 500 ஆண்டுகளைப் போல நீளமாக நீடிக்கிறது.

இப்போது கிடைத்திருக்கும் இடைவெளி, சர்வ வல்லமைப் படைத்தவன் மனிதன் என்கிற நம் மமதையை சுக்குநூறாக உடைத்து விட்டது. நாம் இந்த அவகாசத்தை அற்புதமாக பயன்படுத்துவோம். படிக்க வேண்டும் என்று தவறவிட்ட நூல்களை தூசி தட்டி எடுத்து வாசித்து முடிப்போம். தமிழில் குவிந்து கிடக்கும் பண்டைய இலக்கியங்களைப் படித்து மகிழ்வோம். நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில் அவர்கள் எப்படி நிம்மதியாக இருந்தார்கள் என்கிற விவரம் நமக்கு தோள்களில் கைபோட்டு ஆறுதல் சொல்லும் அருமருந்தாக இருக்கும்.

எத்தனையோ மனித உறவுகளை அவசரத்தின் காரணமாக ஒதுக்கித் தள்ளி விட்டு ஓடிக் கொண்டிருந்தோம். நம் சிரிப்புகளில் கூட சிக்கனம் இருந்தது. கண் அசைவில் கூட கஞ்சத்தனம் இருந்தது. விசாரிப்பில் கூட வெற்றுச் சொற்கள் இருந்தன. கைகுலுக்குவதில் கூட நழுவும் மனப்பான்மை இருந்தது. இப்போது, நம் கைக்கு அருகில் காலம் நிமிடங்களாக கொட்டிக் கிடக்கிறது.

ஒவ்வொரு நாளும், பேச நினைத்தவர்களிடம் எல்லாம் ஆசையாய் பேசுவோம். அக்கறையாய் விசாரிப்போம். அன்பு தடவி உறவாடுவோம். நம் சொற்களால் அவர்களுக்கு சுகமளிப்போம். ஒருநாளைக்கு 20 பேரிடமாவது இனிமையாகப் பேசி உறவுகளையெல்லாம் புதுப்பிப்போம். பள்ளிப்பருவத்தில் நம்மோடு துள்ளி திரிந்தவர்களோடு, அன்பாகப் பேசி அந்த கள்ளமில்லா நாட்களுக்கு பயணப்படுவோம். நம் இல்லத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசுவோம். ஒன்றாக தரையில் அமர்ந்து உணவைப் பகிர்வோம். உணவோடு, உணர்வையும் பகிர்வோம். இத்தனை நாட்களாக அள்ளிப் போட்டுக் கொண்டும், வேகமாய் விழுங்கிக் கொண்டும் உணவு நேரத்தை கடமையாகவும், கடனாகவும் செய்தோம். இத்தனை நாள்கள் சாப்பிடுவது சாம்பாரா, ரசமா என தெரியாமல், அசைபேசி அழைப்பில் மூழ்கியிருப்போம். இப்போது, விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொள்வோம்.

வாழ்க்கை என்பது வாழ்க்கையின் வெற்றி விழிப்புணர்வில் அடங்கியிருக்கிறது. நடக்கும்போது ஒவ்வோர் அடியையும் விழிப்புணர்வுடன் வைத்தால் நடையே நடனமாகி விடும். உண்ணும் போது, ஒவ்வொரு கவளத்தையும் விழிப்புணர்வோடு அருந்தினால் உணவே அமுதமாகி விடும். பேசும் போது விழிப்புணர்வுடன் உரையாடினால், உரையாடல் மந்திர உச்சாடனமாகி விடும். குளிக்கும் போது விழிப்புணர்வோடு குளித்தால், குளியல் அதிவேகமாகி விடும். விழிப்புணர்வுடன் வாழ்வதற்கு நாம் கற்றுக் கொள்ளும் பருவமாக இந்த விடுமுறைக்காலம் இருக்கட்டும்.

வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை காலங்கள் தோறும் வந்த கடுமையான நோய்கள் நிரூபித்து வந்த வண்ணம் இருக்கின்றன. இயற்கையோடு கை குலுக்க முற்படலாமே தவிர, அதை காலிடறி விழ வைக்க முடியாது என்பதை மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். நிச்சயமற்றவற்றின் நடுவே, இனிமையை நுகர்வது தான் உண்மையான பக்குவம். அதையறிந்து கொள்வதற்கு, இது நாள் வரை நாம் வாழ்ந்ததற்கு நன்றி தெரிவிப்பதற்கு, இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்துவோம்.

நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை. மானுடம் பல யுகங்களாகப் போராடி போராடி உலகத்தை நிரப்பியிருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த இடர்பாடு கால் புள்ளியே தவிர, முற்றுப்புள்ளி அல்ல. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து, செய்ய வேண்டியவற்றைச் செய்து, புன்னகையும், மகிழ்ச்சியையும் இதயத்தில் நடனமாடுமாறு வாழ்வை அணுகினால், இதுவும் கடந்து போகும். நாம் எதிர்காலத்தில், நம்பிக்கையோடு நடந்து போவோம்” என்றார்.

வாழ்க வளமுடன்.

Loading

ரெட்டி மலர்-மாத இதழ்