கண்பார்வை யற்ற மாணவி இரா. காவியா பிளஸ் 2 பொது தேர்வில் 600க்கு 571மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் மாநில அளவில் பார்வை இல்லாதவர்களிலேயே முதலிடம் பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி காவியா கூறுகையில் சென்னையில் உள்ள பார்வையற்றவர்களுக்கான கல்லூரியில் எனது பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளேன்.
IAS ஆகவேண்டும் என்பதே எனது லட்சியம். குடும்ப சூழல் அதற்கு இடம் கொடுக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. தன்னார்வலர்கள் உதவி கிடைத்தால் கல்லூரியில் எனது பட்ட படிப்பிலும் முதல் மாணவியாக வருவேன்.அதற்கு மேலும் சாதனை படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
இவருடைய தந்தை பி. இராமகிருஷ்ணன் கூறியதாவது, நான் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் சிறிய குக் கிராமத்தில் கையில் சுற்றும் கரும்பு மிஷன் வைத்துக் கொண்டு ஜூஸ் தயாரித்து விற்று ஜீவனம் நடத்தி வருகிறேன். ரெட்டி கஞ்சம் வகுப்பை சேர்ந்த எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். என் மூத்த மகள் காவியா பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர். இந்நிலையில் +2 வரை திருச்சியில் உள்ள கண் பார்வை இல்லாதவர்கள் படிக்கும் பள்ளியில் மிகுந்த சிரமத்திற்கிடையே படிக்க வைத்தேன். இதுவரை படிக்க வைத்ததே சிரமம் என்ற நிலையில், என் மகள் படிப்பை தொடரவும் தனது IAS லட்சியத்தை அடையவும் விரும்புகிறார். என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டு இருந்த நிலையில் ரெட்டிமலர் ஆன்லைன் பத்திரிகை மூலம் துறையூர் அருகே ஒட்டம்பட்டியை சேர்ந்த எஸ். இந்துமதி என்ற தந்தையை இழந்த மாணவிக்கு ஓ.பி.ஆர். அறக்கட்டளை மூலம் கல்வி உதவி என்ற செய்தியை காவியாவின் பெரியப்பா அதாவது என் அண்ணன் மகாலிங்கம் மூலம் அறிந்த என் மகள் அறக்கட்டளை நிர்வாகி திரு. வீ.செல்வராஜூ வை தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டாள். நானும் என் நிலையை அவரிடம் எடுத்துச் சொன்னேன். அவரும் எங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து சிறிது நேரம் கழித்து ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை உங்கள் மகள் காவியாவின் முழு கல்விச்செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. கல்விக்கான அனைத்து உதவியையும் அறக்கட்டளை இனி செய்யும். நீங்கள் கவலையில்லாமல் மேற்படிப்பை தொடருங்கள் என்று உடனடியாக பதில் செய்தியை அனுப்பிவைத்தார். அவருக்கும், ஓ.பி.ஆர். அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது குடும்பத்தின் சார்பாக இதயப் பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஓ.பி.ஆர். அறக்கட்டளை நிர்வாகி திரு. வீ. செல்வராஜூ ரெட்டிமலர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி:
எங்களது OPR நினைவு தொண்டு அறக்கட்டளை மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக இதுவரை சிறிய அளவில் ஏழை மாணவ,மாணவிகளுக்கு சென்னையில் தங்கும் இட வசதி, கல்வி வழிகாட்டுதல், கல்விக்கு நிதி உதவி என பலருக்கும் தேவையான உதவிகளைய செய்து வந்திருக்கிறோம். இதனை மேலும் விரிவு படுத்தும் வகையில் இந்த ஆண்டு +2 மாணவிகள் இருவருக்கு கல்லூரி படிப்புக்கான மொத்த செலவையும் எங்கள் அறக்கட்டளை ஏற்கிறது. முதலாவதாக திருச்சி மாவட்டம்
ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த தந்தையை இழந்த மாணவி எஸ்.இந்துமதி 600 க்கு 582 மதிப்பெண் பெற்றவர். அவரது பட்டய கணக்கர்( CA) படிப்புக்கான முழு கல்விச்செலவையும் எங்கள் அறக்கட்டளை நிர்வாகி திருமதி பாரத தேவி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். மாணவி  இந்துமதியின் முதல் பருவ கல்லூரி கட்டண தொகை ₹25,000/-யை 18.07.2020 அன்று அறக்கட்டளை மூலம் வழங்கியிருக் கிறோம்.
இதேபோல் கண் பார்வை யற்ற மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகிலுள்ள பூலக்காடு கிராமத்தை சேர்ந்த மாணவி ஆர்.காவியா அவர்களது IAS கனவு, நனவாகும் வரையிலான கல்விச் செலவை கோவையில் உள்ள செங்காட்டுபட்டி “சின்ன பண்ணை” திரு.எஸ் மோகன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரின் உதவிக்கும் OPR அறக்கட்டளை நன்றியை தெரிவித்து கொள்கிறது.

மேலும் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஓ.பி.ஆர். அறக்கட்டளை மூலம் நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஆண்டு தோறும் திருச்சி கல்வி காவலர் மறைந்த ஐயா K.ரெங்கராஜன் (K.R.T) நினைவாக அறக்கட்டளை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து உண்மையான பயனாளிகளை அடையாளம் கண்டு அறக்கட்டளை விதிகளுக்குட்பட்டு வழங்க இருக்கிறோம். இது தவிர அறக்கட்டளையின் ஓர் அங்கமாக K.R.T. Career Academy தெடங்கபட்டுள்ளது. அதன் மூலம் TNPSC தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை கீழ்கண்ட மின்னஞ்சல் மிகவரியில் அனுப்பலாம் என்றார். oprtrust2020@gmail.com.

 

ரெட்டி மலர்-மாத இதழ்