dr mohan reddy

பிரபல டாக்டர்.C.M.K. ரெட்டி அவர்களின் உடன் பிறந்த மூத்த சகோதரர் டாக்டர்.C.மோகன் ரெட்டி இன்று 22.07.2020 அதிகாலை சென்னையில் இறைவனடி சேர்ந்தார். டாக்டர் சி. மோகன் ரெட்டி ஏழைகளின் நண்பர், வயது வித்தியாசம் பாராமல், ஏழை பணக்காரன் என்கிற பேதம் பார்க்காமல் மனித நேயத்துடன் அனைவரிடமும் பழகும் பண்பாளர். இறக்க குணம் கொண்டவர். வாழ்க்கை தத்துவத்தை அறிந்த, தேர்ச்சி பெற்ற சிறந்த மருத்துவ அறிஞராக நல்ல வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர். பிற மருத்துவர்களுக்கெல்லாம்
சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர். எளிதில் அனுகக்கூடியவராகவும் சுயநலம் இல்லாதவராகவும் இறுதிவரை வாழ்ந்தவர். இவரது மறைவு வில்லிவாக்கம் ஏழை எளிய மக்களின் ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு.

டாக்டர்C.மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பெனுபள்ளி கிராமத்தில் 1936 ஜூன் 23 அன்று பிறந்தவர். இவரது ஆரம்பபள்ளி படிப்பை கூடூரில் பயின்றவர். தனது இன்டர் மீடியட் படிப்பை சென்னை சர். தியாகராயா கல்லூரியிலும், மருத்துவ பட்டபடிப்பை (M.B.B.S.) கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியிலும் பயின்றவர்.
தொடர்ந்து தென் இந்திய இரயில்வே மருத்துவமனையில் சென்னையில் சிறப்பாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பல ஆயிரம் அறுவை சிகிச்சைகளை இலவசமாகவும், வெற்றிகரமாகவும் செய்தவர்.வில்லிவாக்கம் பகுதியில் 1968 ஆம் ஆண்டு “மோகன் நர்சிங் ஹோம்” என்ற பெயரில் தனியாக தொடங்கி அப்பகுதி ஏழை மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவரது வாழ்க்கையில் தமது இறுதி நாள் வரை ₹10/- கட்டணம் பெற்ற டாக்டர் என பெயர் பெற்றவர். தமது வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் மருத்துவ மனையிலேயே தங்கி எந்த நேரமும் மருத்துவ உதவிக்காக வருபவர்களுக்கு உதவி செய்து ஏழை மக்களின் துயர் துடைத்த மாமனிதர்.
டாக்டர் மோகன் ரெட்டி அவர்களால் தொடங்கபட்ட துர்கா கல்வி அறக்கட்டளை என்ற தெலுங்கு மொழி கல்வி நிறுவனத்தின் தாளாளராகவும், துணைத் தலைவராகவும்,அகில இந்திய தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையின மக்களுக்கான சம்மேளனத்தின் புரவலராகவும் இருக்கும் இவர் “மோகன் கார்டன்” என்ற திருமண மண்டபத்தின் உரிமையாளர். இவரது அர்ப்பணிப்பு பணிகளால் மருத்துவ வாழ்க்கையிலும் , பொது வாழ்க்கையிலும் அனைவரின் அன்பையும் பெற்றவர்.
வில்லிவாக்கம் பகுதியில் இவரின் உதவி பெறாத தேவாலயம், மசூதி, கோவில்களே இல்லை எனலாம். தனது வாழ்நாள் முழுமையும் ஆத்ம திருப்திக்காக சென்னை சின்மையானந்தா மிஷனரி க்கு தனது ஒப்பற்ற பணியையும், பங்களிப்பையும் வழங்கதவரியதில்லை. இந்த கொரானா நோயின் தீவிர தாக்கத்திலும் கூட கடந்த ஜூன் 23 அன்று தனது பிறந்த நாளில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் குடிசை பகுதியில் உணவு பொட்டலங்கள் வழங்கினார். தன்னை நாடி வந்த ஏழை மக்களுக்கு  எத்தகைய உதவியையும் “இல்லை” என்று மறுத்ததே இல்லை. சென்னையில் இந்த கொரானாவின் தாக்கம் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அவரிடம் உதவி பெற்ற ஏழைகள் ஏராளமானோர், அவரின் ஆதரவு பெற்றவர்கள், உறவினர்கள் நண்பர்கள், நலம் விரும்பிகள்,சமூக ஆர்வலர்கள் என பலரும் தனது சிறிய அளவிலான இறுதி மரியாதையையும் செலுத்த முடியவில்லை என வருத்தப்படாத உள்ளங்களே இல்லை. இருந்தும் ஏராளமானவர் கள் தங்களுக்கு உற்ற துணையாய் இருந்த நல்ல மனிதரின் முகத்தை கடைசியாக காண மக்கள் கூட்டம் கூடி நிற்பது அனைவரின் கண்களிலும் நீர் கசிவை ஏற்படுத்தியது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாளில் நிகழ்ந்த இந்த மறைவு அனைவர் மனதிலும் அழியா நிகழ்வாகும். நாம் அனைவரும் அண்ணாரது மறைவிற்கும் அவருடைய ஆன்மா சாந்தியடையவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

டாக்டர் மோகன் ரெட்டியை இழந்து வாடும் அவரது சகோதரர் தெலுங்கு மொழி பேசும் அனைத்து மக்களின் பாதுகாவலர் டாக்டர் C.M K. ரெட்டி அவர்களுக்கும் அவரது குடும்பத்தவர் அனைவருக்கும் ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பிலும், ரெட்டி மலர், ரெட்டி இளைஞர் பேரவை சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரெட்டி மலர்-மாத இதழ்